சென்னை:உயர் கல்விக்கான பொது பாடத் திட்டத்தை தமிழ்ப் படுத்துவதற்கு தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும் நடப்பாண்டில் பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியாது என்றும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி கற்பிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உயர்கல்வியில் பொதுப்பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான மாதிரி பாடத்திட்டம்(மாடல் சிலபஸ்) அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதில் 90 சதவீத கல்வி நிறுவனங்கள், அதனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டதாக உயர் கல்வித்துறை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் பொதுப் பாடத்திட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து அவர்களுடன் ஆலோசனை நடத்த உயர்கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. அதன்படி, உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் நடந்தது.
இதில் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், கல்லூரிக் கல்வி இயக்குனர் கீதா, உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னையில் இருந்து 22 கல்லூரிகள் உள்பட மதுரை, கோவை, திருச்சி போன்ற சில மாவட்டங்களில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கருத்துகளை தனித்தனியாக பதிவு செய்தனர். இவர்களில் மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி முதல்வர்கள் உள்பட சில கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பொதுப் பாடத்திட்டத்தை ஆதரித்து பேசினார்கள்.
ஆனால் கோவை, திருச்செங்கோடு, சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரநிதிகள் பொது பாடத்திட்டத்தை ஆதரிக்காமல், அடுக்கடுக்கான எதிர்ப்பு கருத்துகளையும், பொதுப் பாடத்திட்டத்தில் உள்ள பிரச்னைகளையும் எடுத்துரைத்தனர். அதன்படி, மிக முக்கியமாக பொதுப் பாடத்திட்டத்தால் என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தையும் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் முன்வைத்தனர்.