சென்னை: ஏழுக்கிணறு பகுதி - வரதையர் தெருவில் வசித்து வருபவர், வினோத் குமார் (27). ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில்ஜா (21) மற்றும் அவரது நண்பர் இருவரும், வினோத் குமாரின் ஆட்டோவில் ஏறி சென்னை மெரினா கடற்கரையில் இறங்கியுள்ளனர்.
ஆட்டோவில் இருந்து இறங்கும்போது இருவரும் தங்களது கைப்பைகளை ஆட்டோவில் தவற விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் கைப்பைகளை தவற விட்டதாக, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் நிக்கில்ஜா புகார் அளித்துள்ளார்.
நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
பயணி எவரோ ஒருவர், ஆட்டோவில் பைகளை தவற விட்டுச் சென்றிருப்பதைக் கவனித்த ஓட்டுநர் வினோத் குமார், உடனடியாக பைகளை தனது வீட்டின் அருகில் உள்ள ஏழுகிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம், ஏடிஎம் கார்டு, அலைபேசி, ஆவணங்கள் அடங்கிய இரண்டு பைகளையும் காவலர்கள் நிக்கில்ஜாவிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தவறவிட்ட பைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமாரின் செயலை பாராட்டிய, சென்னை வடக்கு இணை ஆணையர் துரைகுமார் இன்று (ஜூலை 4) வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நாளை கல்லூரிகள் திறப்பு!