ஊரடங்கில் அத்துமீறி வெளியே வருவோரின் வாகனங்களை, காவல் துறையினர் பறிமுதல்செய்து-வருகின்றனர். ஆனால், அபராதம் செலுத்த முடியாது என காவல் துறையுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்று, சேத்துப்பட்டு சிக்னலில் பணி செய்யவிடாமல் தடுத்த பெண் வழக்கறிஞர், அவரது மகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, பிராட்வே பாரதி கல்லூரி சிக்னல் அருகில் முத்தியால்பேட்டை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை, முத்தியால் பேட்டை சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.
விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர் முகக்கவசம் அணியவில்லை என்றும், முதியோருக்கான இ-பதிவை எடுத்துக்கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற காரணத்தையும் சுட்டிக்காட்டி அவரது ஆட்டோவை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநருக்கும், பணியிலிருந்த பெண் உதவி ஆய்வாளருக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது.
பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் எகிறிய ஆட்டோ ஒட்டுநர் அப்போது, பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்விடுத்தது மட்டுமின்றி, தனக்கு அமைச்சர் சேகர் பாபுவை தெரியும் வரச்சொல்லவா? எனப் பல்வேறு வகைகளில் மிரட்டியதாகவும் தெரிகிறது. காவல் துறையினர் முகக்கவசம் அணிய சொல்லியும் அவர் அணியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு, இறுதியாக அங்கிருந்து சென்றார்.
இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்நபர் குறித்து முத்தியால்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் ஆட்டோ ஓட்டுநர் மண்ணடியைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பது தெரியவந்துள்ளது. அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.