சென்னை: பாடி 200 அடி சாலையில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்திற்கு அருகே நேற்று (28.08.2023) நள்ளிரவு பராமரிப்பு வேலை பார்ப்பதற்கு லோடு வேன் மூலம் ஆட்களை அழைத்து வந்துள்ளனர். பின்னர், லோடு வேனை சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் ஓரமாக நிறுத்தி விட்டு வேலை பார்த்து வந்துள்ளனர்.
அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் ஓரம் நின்றிருந்த லோடு வேன் மீது மோதி உள்ளது. அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நபர் மற்றும் சாலையில் அருகில் வேலை பார்த்து வந்த நபருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) எனவும் ஹெல்மெட் அணியாமல் வந்ததும் தெரியவந்தது. மேலும், காயமடைந்த நபர்கள் யுவராஜ் மற்றும் ஏழுமலை என்பதும் தெரியவந்துள்ளது. கவனக்குறைவால் வாலிபர் லோடு வேன் மீது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டப்படி இரு சக்கர வாகனத்தில் பயனிப்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும்.