சென்னையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் குண்டு வீச வந்தவர்களை விரட்டியதை அடுத்து தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல் துறையினர் அவர்கள் வந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சக்தி, தீபன், கண்ணன், ஜனார்த்தனன், வாசுதேவன், பாலு, சசிகுமார், தமிழ், குமரன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பத்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து பத்து பேரின் உறவினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதில், ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் மத்திய அரசின் உத்தரவுக்குப் பணிந்து தமிழ்நாடு அரசு அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், காவல் ஆணையர் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.