சென்னை:கரோனா பெருந்தாெற்று காலத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக டேட்டா சிம் கார்டு இலவசமாக வழங்கும் திட்டத்திற்காக கொள்முதல் செய்ததில் 4 கோடியே 93 லட்சம் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என இந்திய தணிக்கைக்குழு குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும் மாணவர்களின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய தணிக்கைக்குழு 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இன்று (அக்.12) வெளியிட்டுள்ளது. அதில், உயர்கல்வித்துறையில் டேட்டா சிம் கார்டுகளின் கொள்முதலில் பயனற்ற செலவினம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 'கரோனா பெருந்தாெற்றின் போது கல்லூரிகளில் நடத்தும் இணைய வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு டேட்டா சிம் கார்டுகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை 2021 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது.
கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு 6.12 லட்சம் சிம்கார்டுகளும், தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 3.58 லட்சம் சிம் கார்டு வழங்குவதற்கு என 9.69 லட்சம் சிம் கார்டு வாங்குவதற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 மாதத்திற்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்க வேண்டும். தமிழ்நாடு மின்னணு நிறுவனம் கொள்முதல் முகமையாக நியமிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மார்ச் 2021-ல் எல்காட் நிறுவனத்திற்கு 43.16 கோடி நிதியை அரசு வழங்கியது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 பிப்ரவரியில் துவக்கிவைத்தார். பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய 3 மாதங்களில் மாணவர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டன. அதனை கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மூலம் காெடுக்கப்பட்டது.
அதில், ஏப்ரல் 2022 நிலவரப்படி வழங்கப்பட்ட 9 லட்சத்து 20 ஆயிரத்து 102 டேட்டா சிம் கார்டுகளில் கல்லூரி கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் 60 ஆயிரத்து 495-ம், தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் 50 ஆயிரத்து 351 என 1 லட்சத்து 10 ஆயிரத்து 846 சிம் கார்டுகள் மாணவர்களுக்கு கொடுக்கப்படாமல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள், கல்லூரிகளில் இருந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாணவர்கள் கார்டுகளைப் பெறுவதற்கு கல்லூரிகளுக்கு திரும்பவில்லை என்று கல்லூரிகள் தெரிவித்தன.
4.93 கோடி ரூபாய் வீண் செலவு:டேட்டா இணைப்பு இல்லாத மாணவர்களுக்கு ம்ட்டுமே சிம் கார்டுகளை வாங்க வேண்டும் என்ற முடிவை துறை கடைபிடிக்கத் தவறியதாலும், தேவையை சரியாக மதிப்பிடத் தவறியதாலும் 1.1 லட்சம் விநியோகம் செய்யப்படாத சிம் கார்டுகள் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால், 4 கோடியே 93 லட்சம் தவிர்க்கக்கூடிய செலவினம் ஏற்பட்டது.