சென்னை:விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார்(27). இவர் சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் முதல் தெருவில் நண்பர்களுடன் தங்கி சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். அருண்குமார் பல ஆண்டுகளாக பிரியா என்பவரை காதலித்து, கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார். பிரியா திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அயனாவரத்தில் தங்கி வந்த காவலர் அருண்குமார், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், இன்று காலை பணியிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்கு சென்று, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடன் அறையில் தங்கி வந்த புஷ்பராஜ் என்பவர் அயனாவரம் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவலர் அருண்குமாரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையாக அருண்குமார் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். சோதனையின் போது அருண்குமார் எழுதி வைத்த கடிதத்தை அவரது அறையில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். அந்த கடிதத்தில், "நானாக தேடிக் கொண்ட வாழ்க்கை நல்ல முறையில் செல்லவில்லை. அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்றும், தொடர்ச்சியாக தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், தனது மனைவி தன்னை ஆபாசமாக பேசி வந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என உருக்கமாக கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருண்குமாரின் திருமணம் நடைபெற்ற போது 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்ததும், அதன் பிறகு விடுமுறை கிடைக்காமல் இருந்ததால் மனைவியை சந்திக்க முடியாது நிலை ஏற்பட்டதால், கணவன் - மனைவி இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு ஒருகட்டத்தில் பூதாகரமாக வெடித்ததாக கூறப்படுகிறது.