சென்னை:சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையானது. நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திகழும் சென்ட்ரல் ரயில் நிலையம், தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட ரயில்களை இந்த ரயில் நிலையம் கையாள்கிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஐந்து லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தச் சூழலில் 'அமைதியான ரயில் நிலையம்' என்ற திட்டத்தின்கீழ், கடந்த மாதம் சென்ட்ரல் ரயில் நிலையம் அமைதியான ரயில் நிலையம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒலிபெருக்கியில் தகவல் தெரிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு தெரிவிக்கப்பட்டது.
ரயில் எண், ரயில்கள் வரும் நேரம், சேரும் இடம், நடைமேடை எண் போன்ற தகவல்களும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டது. சென்னையில் பல மொழி பேசும் மக்கள் வசித்து வருவதால், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தகவல்கள் தெரிவிக்கும் விதமாக டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டது.
விமான நிலையங்களில் பின்பற்றப்படுவது போல ரயில் நிலையங்களிலும் ரயிலின் தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள எம்டிசி பேருந்து நிறுத்தம், வால்டாக்ஸ் சாலை, புறநகர் முனையம் ஆகிய மூன்று நுழைவுவாயில்களிலும், இந்த டிஜிட்டல் திரை வைக்கப்பட்டிருந்தது. புறநகர் ரயில்களுக்கு வழக்கம் போல ஒலிபெருக்கி அறிவிப்புகள் தொடர்ந்து அளிக்கப்படும் எனவும், வெளியூர் செல்லும் ரயில்களுக்கு மட்டுமே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.