தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13,38,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

By

Published : Oct 14, 2022, 7:32 AM IST

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு...!
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு...!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4,888 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிலிருந்து 1,667 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13,38,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, 28 வகையான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல கடற்கரை கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும், அதைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரையில் தூக்கி எறிவதாலும் அல்லது விட்டுச் செல்வதாலும், கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் செப் 5ஆம் தேதி முதல் மாநகராட்சியின் சார்பில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் செப் 26ஆம் தேதி முதல் கடந்த 9ஆம் தேதி வரை இரண்டு வாரக் காலத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 12,883 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 4,888 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிலிருந்து 1,667 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13,38,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூதாட்டிக்காக காட்டுப்பகுதியில் 10 கி.மீ., நடந்து செல்லும் தபால்காரர் - கௌரவித்த அரசு

ABOUT THE AUTHOR

...view details