சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தநிலையில் விமானத்தில் பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது சுற்றுலாப் பயணி விசாவில் சிங்கப்பூர் செல்ல சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 2 பயணிகளையும் சுங்கசோதனை இடத்திலே அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களின் உடைமைகளை முழுமையாகச் சோதித்தனர். சோதனையின் போது அவர்கள் கொண்டுவந்த சூட்கேசின் ரகசிய அறைகளில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்களை பெரும் அளவில் பதுக்கிவைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.
இருவரின் சூட்கேஸின் ரகசிய அறைகளுக்குள் சுமார் ரூ. 56 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இரு பயணிகளின் வெளிநாட்டு பயணத்தையும் ரத்து செய்து, அவ்விருவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பணத்தையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.