சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவருக்கு திருமணமாகி சுடர்மதி என்கின்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினேஷ்குமார் திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம் போல பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புளியந்தோப்பு பேசன் பிரிட்ஜ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தினேஷ்குமாரை மடக்கி, தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ஓங்கி வெட்டியுள்ளனர்.
அப்போது எதிர் திசையில் ரோந்து பணியில் வந்துகொண்டிருந்த பேசின்பிரிட்ஜ் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடி உள்ளார். இதனைப் பார்த்த அந்த 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திக்கொண்டு ஓடிய காவல் ஆய்வாளர் பேசின் பிரிட்ஜ் ரயில்வே ஸ்டேஷன் அருகே இரண்டு பேரை மடக்கி பிடித்தார்.
மேலும் காயம்பட்ட தினேஷ்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் அயனாவரம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ்குமார்(25) மற்றும் அயனாவரம் ரயில்வே குடியிருப்பை சேர்ந்த பிரதீப்குமார் (28) என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய நபர் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின்( 23) என்பது தெரியவந்தது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. இதில் சஞ்சீவ் குமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞரான ராஜேஷ் என்பவர் சஞ்சீவ் குமார் மற்றும் தப்பியோடிய அஸ்வினுக்கும் வழக்கறிஞராக இருந்து வந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் ராஜேஷ் தனக்கு தெரிந்த பெண் ஒருவரை, திருவொற்றியூரில் வேலை செய்யும் நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை செய்து வருவதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறி சஞ்சீவ்குமாரை ஜாமினில் எடுத்துள்ளார்.
சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் தினேஷ்குமாரை கொலை செய்வதற்கு ஒத்துக்கொண்டு திருவொற்றியூர் பகுதியிலிருந்து தினேஷ்குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பிறகு இவர்கள் தினேஷ்குமாரை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.