சென்னை:பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் என்ற உதவி மையமானது காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மூலமாக தொடங்கி வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த உதவி மையம் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்களையும் முதியவர்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கண்டறிந்து உரிய பாதுகாப்புடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் மீட்டு தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளித்தும் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களிலும் பாதுகாப்பாக தங்க வைத்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மீட்கப்பட்ட நபர்களின் முகவரியை கண்டறிந்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நல்ல முறையில் சேர்த்து வைக்கும் பணியையும் காவல் கரங்கள் செய்து வருகிறது. ஒரு வருடத்தில் மட்டும் காவல் கரங்கள் உதவி மையம் மூலமாக 2 ஆயிரத்து 816 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அவர்களில் 1634 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 178 பேர் அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 182 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், உரிமை கோரப்படாத 822 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்து உதவி உள்ளது.