தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்: கம்பி எண்ணும் காவல் உதவி ஆய்வாளர்! - குற்றச் செய்திகள்

சென்னையில் பணம் கொடுக்கல், வாங்கலில் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபரை தாக்கிய வழக்கில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது
arrest

By

Published : May 15, 2023, 5:03 PM IST

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர், சதீஷ் (43). இவர் வீட்டு மனைகள், வீடுகள் வாங்கி, விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்னையில், 5 பேர் கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவாஸ் (47) ஆவடி மாநகர ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷுக்கு சொந்தமான, சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகர்ப்பகுதியில் உள்ள வீட்டுமனையை ஸ்ரீவாஸ் பத்திரப்பதிவு செய்வதில், ஏற்கனவே இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல ஸ்ரீவாஸ் வீடு கட்டுவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷிடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பணத்தை சதீஷ் திரும்பக் கேட்டதில் உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ், பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் சதீஷின் ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு தமது ரவுடி கூட்டாளிகளுடன் காரில் சென்ற ஸ்ரீவாஸ், சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த கும்பல் அலுவலகத்தில் இருந்த பொருட்களையும், கண்ணாடியையும் அடித்து நொறுக்கியது. மேலும் சதீஷை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த சதீஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆந்திர மாநிலம், கோனே அருவி பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் திலீப், ஜெகன், ரூபன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரவணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர்கள் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸை புழல் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட திலீப் (33), சரவணன் என்கிற வெள்ளை சரவணன் (32) ஆகிய இருவரும் புழல் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆவர். ரூபன் (34) பேசின் பாலம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி. ஜெகன் என்கிற கருப்பு ஜெகன் (21) எம்.கே.பி நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் மீதும் கொலை வழக்கு உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

தாக்குதல் வழக்கில் கைதானவர்கள்

சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீவாஸ் மீது மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவர் மீது 7 பிரிவுகளில் புழல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே ரவுடிகளுடன் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட்டு கம்பி எண்ணும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கைத் தமிழர் வெட்டிக்கொலை: மர்ம நபர்களைத் தேடும் போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details