திருவள்ளூர்:மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவடங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பழைய பைபாஸ் சாலையில், மின்சார ஒயர் மற்றும் மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளது. இது குறித்து எளாவூரில் செயல்பட்டு வரும் மின் பகிர்மான அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேலக்கழனியைச் சேர்ந்த ரகு (45) மற்றும் பெரியஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (39) ஆகிய இரண்டு மின் ஊழியர்களும் மின்சாதனங்களைச் சீரமைக்க சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று ரகுவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆனால் நாகராஜ் மட்டும் குளிர்கால போர்வை அணிந்திருந்ததால், அவரை மின்வாரிய ஊழியர் என்று தெரியாமல் தாக்காமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி உதவி செயற்பொறியாளர் முரளிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, செயற்பொறியாளர் முரளி சம்பவம் நடந்த பகுதிக்கு அருகாமையில் இருந்ததால் விரைந்து வந்து பிரச்னை குறித்து கேட்டுள்ளார். அப்போது, அவரையும் தகாத வார்தைகளால் திட்டி தாக்க முற்ப்பட்டதாக கூறப்படுகிறது.