சென்னை: குமரன் காலனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (65) கோனிகா கலர் லேப்பின் உரிமையாளர் ஆவார். கடந்த மாதம் 22ம் தேதி குடும்பத்துடன் ஹைதராபாத்துக்கு சென்றிருந்தார். பின்னர் 28ம் தேதி வீடு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 66 சவரன் தங்க நகைகள், 80 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துவிட்டு, டிவி.ஆர் கருவிகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தோஷ் குமாரின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பிப்ரவரி 22ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் சந்தோஷ் குமாரின் வீட்டின் அருகே சந்தேகப்படும் படியான நபர்களின் ஆள் நடமாட்டம் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்த சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், இக்கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.