சென்னை:ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழாவது அவென்யூவில் தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவனம் மூலம் பணம் நிரப்பும் பணியானது இன்று காலை நடைபெற்று உள்ளது. அப்போது அதில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் கன்மேனாக வந்த நபர் துப்பாக்கியை துடைத்துவிட்டு அருகில் வைக்கும்போது கீழே விழுந்து வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டா கன்மேன்-னின் இடது பக்க வயிற்றில் பாய்ந்து உள்ளது. துப்பாக்கி தோட்டா பாய்ந்து விபத்துக்குள்ளானதால் கன்மேன் அந்த இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த சக ஊழியர்கள் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதை நிறுத்திவிட்டு, அவர்கள் வந்த வாகனத்திலேயே கன்மேனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
அங்கு கன்மேனை பரிசோதித்த மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து, வயிற்றில் பாய்ந்த தோட்டாவை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.