இலங்கையில் நடந்த தாக்குதலையும், தமிழ்நாட்டில் நிகழ்ந்த சாதி கலவரத்தை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இலங்கையில் பன்னெடுங்காலமாக இஸ்லாமிய தமிழர்களையும், தமிழ் மக்களையும் பிரித்து வீழ்த்தி வெற்றி கண்ட சிங்கள இனவாத அரசு தற்போது நடைபெற்ற தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல் வந்த பிறகும், அதில் கவனம் செலுத்தி மக்களை பாதுகாக்க தவறிவிட்டது. அங்குள்ள சில தேவாலயங்களில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ,லத்தீன் என்று நான்கு மொழிகளில் பிரார்த்தனை நடைபெறுகிறது.
அதில் குறிப்பாக தமிழ் மொழி பிரார்த்தனை நேரத்தின் போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்றே தக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எங்கள் வழிபாட்டுத் தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது இஸ்லாமிய இளைஞர்களை வைத்து தேவாலயங்களில் தாக்குதல் நடத்துகின்றனர். தன்னாட்டு மக்களின் மீதே தக்குதல் நடத்திய ராஜபக்சே இந்த தாக்குதலின் போது அரசு மக்களை காப்பாற்ற தவறிவிட்டது என்று அனுதாபம் கூறுவது போல் நடிக்கிறார்.
நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நாங்கள் பார்க்கிறோம். இதில் வெறும் இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கருத முடியாது. வல்லாதிக்க நாடுகளின் சம்பந்தம் இருப்பதை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.