சென்னையில் மட்டும் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன - மாநகராட்சி - chennai latest news
சென்னை: மே மாதம் முதல் தற்போதுவரை 38 ஆயிரத்து 383க்கும் மேற்பட்ட கரோனா மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கரோனா தீநுண்மி தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகர் போன்ற இடங்களில் அதிகமாகப் பரவி வருகிறது, இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மே எட்டாம் தேதி முதல் தற்போதுவரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 38 ஆயிரத்து 383 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 20 லட்சத்து 87 ஆயிரத்து 416 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர், மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நபர்கள், இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் மருத்துவ முகாம்களின் மூலம் கரோனா பாதித்த 20 ஆயிரத்து 191 நபர்களை மாநகராட்சி கண்டெடுத்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 26) மட்டும் 500 மருத்துவ முகாம்கள் நடைபெற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 53, தண்டயார்பேட்டையில் 48 மருத்துவ முகாம்களும், திரு.வி.க நகரில் 46 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
நேற்று (ஆகஸ்ட் 26) மட்டும் மருத்துவ முகாம்களில் மொத்தம் 24 ஆயிரத்து 309 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஆயிரத்து 612 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால், அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு இருந்த மற்ற நோய்களுக்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு முகாம்!