தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள இரண்டாயிரத்து 331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 4ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்பாணையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனுபவம், தகுதி நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவி பேராசிரியர் பணிகள் நிரப்பப்படுவார்கள்.
இவர்களின் பணி அனுபவ சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் பொழுது விண்ணப்பதாரர்கள் அளித்த அனுபவச் சான்றிதழ் போலி என கண்டறியப்பட்டால் விண்ணப்பதாரர், கல்லூரியின் முதல்வர், அந்த சான்றிதழை உறுதி செய்த அலுவலர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அனுபவச் சான்றிதழில் கையொப்பமிடும் அலுவலர்கள் முழுவதுமாக சரிபார்த்த பின்னர் கையொப்பமிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன் கூறுகையில், "பணி அனுபவச் சான்று கேட்கும் காலத்திற்கு வருகைச் சான்று, ஊதியப் பட்டியல் ஆகியவற்றினை இணைத்து கல்லூரியின் முதல்வர் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். பணி அனுபவச் சான்று உரிய பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். பணி அனுபவச் சான்றிதழில் அடித்தல் திருத்தல் இருந்தால் ஏற்கப்பட மாட்டாது.
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள கல்வித் தகுதியுடன்கூடிய பணிக் காலங்களுக்கு மட்டுமே அனுபவச்சான்று வழங்கப்பட வேண்டும். கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கல்லூரி செயலாளர், முதல்வர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அத்தாட்சி செய்யப்படுகிறது. ஆவணங்களில் ஏதேனும் தவறாக இருப்பின் அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அந்தக் கல்லூரி செயலர், முதல்வர், விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.