சென்னை: அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தில், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்வதாக ஈபிஎஸ் தரப்பு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தது.
ஆனால் இதற்கு சபாநாயகர் அங்கீகாரம் வழங்காததால், நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஈபிஎஸ் தரப்பினர் புறக்கணித்து சபாநாயகர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு நாள் சட்டபேரவை நிகழ்விலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதியையும் மீறி ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள போராட்டம் நடத்தும் இடத்தில் கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு காவல்துறையினரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், ஈபிஎஸ் உள்பட அவரது தரப்பினர் கைது செய்யப்பட்டு, சென்னை ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ், "முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை எதிர்க்கட்சி துணைச் செயலாளராகவும் அங்கீகரிக்க 62 எம்எல்ஏக்கள் ஒப்புதலோடு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம்.