தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் - cheif minister

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

tamilnadu assembly

By

Published : Jul 20, 2019, 12:13 PM IST

Updated : Jul 20, 2019, 12:39 PM IST

அதன் விவரம் பின்வருமாறு,


​கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு, தற்போது வழங்கப்படும் குடும்ப நல நிதியானது இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கூட்டுறவு பொதுவிநியோகத் திட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, குடும்ப நல நிதியிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வரும் 5,000 ரூபாய் முன்பணமானது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

​கூட்டுறவு பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் படியானது, 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

​கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளர்களின் மாத ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவர்த்தனை முறை மூலம் வரவு வைக்கப்படும்.

கால்நடை பராமரிப்புத் துறை:

தமிழ்நாட்டில் 3,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 75 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 3 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.


5,000 கால்நடை அலகுகளுக்கு மேல் இருக்கும் 25 கிராம பஞ்சாயத்துகளில் புதிய கால்நடை மருந்தகங்கள், தலா 14 லட்சம் ரூபாய் வீதம் 3.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.


ஐந்து கால்நடை மருந்தகங்கள் தலா 50 லட்சம் ரூபாய் வீதம், 2.50 கோடி ரூபாய் செலவில் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.


இரண்டு கால்நடை மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள் தலா 1.20 கோடி ரூபாய் வீதம், 2.40 கோடி ரூபாய் செலவில், 24 மணி நேரமும் இயங்கும் பன்முக மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை

​தமிழ்த் திரை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கிய பழம்பெரும் கதாநாயகனும், சிறந்த பாடகரும், ரசிகர்களால் எம்கேடி என அன்புடன் அழைக்கப்படும் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் அவருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் கட்டப்படும்.

தமிழ் வளர்ச்சித் துறையில் முக்கிய பங்காற்றிய உளுந்தூர் பேட்டை சண்முகம், கவிஞர் நா. காமராசு, முனைவர் இரா. இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பண்டித ம.கோபால கிருட்டிணன், பாபநாசம் குறள்பித்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் ரூ.35 லட்சம் செலவில் நாட்டுடைமையாக்கப்படும்.

தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 01.11.1956ஆம் நாளை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

வாரணாசி இந்து பல்கலைக்கழகம், கவுகாத்தி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் ரூ.36 லட்சம் செலவில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம் தோற்றுவிக்கப்படும்.

உலக அற இலக்கியமான திருக்குறளின் பெருமையை பரவச்செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலகமொழி ஆகியவற்றில் திருக்குறள் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும். இதற்கென தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான ஹூப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட ஐரோப்பிய தமிழறிஞர் டாக்டர். ராபர்ட் கால்டுவெல்லின் சீரிய தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில், ஒப்பிலக்கண ஆய்வில் தமிழறிஞர்களையும், மாணவர்களையும் நெறிப்படுத்தவும், திராவிட மொழிகளை ஒப்பிட்டு தொடர்ச்சியாகப் பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளவும், “தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்” பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும்.

“ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக்கழகத்தில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும்

Last Updated : Jul 20, 2019, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details