சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, தமிழ்நாட்டில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வருகிறது எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு உடலுறுப்புகள் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு உறுப்புகள் கூட வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்வதில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பூங்கோதை ஆலடி அருணா, உடல் உறுப்பு தானத்தின் அவசியம் அறிந்து சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் அவரது மனைவி ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி எனவும், ஏற்கனவே முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரும் உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறினார். மேலும், அவர்களைப்போன்று அனைத்து உறுப்பினர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.