தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய நடராஜர் சிலை மீட்பு - ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய நடராஜர் சிலை மீட்பு

ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய நடராஜர் சிலை எனக் கூறப்படும் விலை மதிப்பற்ற நடராஜர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டனர்.

ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய நடராஜர் சிலை மீட்பு
ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய நடராஜர் சிலை மீட்பு

By

Published : Jul 22, 2022, 8:30 PM IST

சென்னை மணலி அருகே தொண்மயான பஞ்சலோக சிலை இருப்பதாக சிலை கடத்தல் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று (ஜூலை 21) சென்னை மணலியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரவி உத்தரவுப்படி டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான காவல் துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது சாத்தாங்காட்டில் உள்ள இரும்பு மற்றும் எக்கு மார்க்கெட் ஒன்றில் 4.5 ஐந்து அடி உயரமுள்ள பெரிய நடராஜர் சிலையை கைப்பற்றி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் வசித்த பெண் ஒருவர் இந்த சிலையை தொன்மையானதல்ல என Non-Antiquity சான்று வழங்கக் கோரி இந்திய தொல்லியல் துறைக்கு இடைத்தரகர் மூலம் விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.

அப்பெண் இப்போது வசிப்பதாகக் கூறப்படும் ஜெர்மனிக்கு அதைக் கொண்டு செல்ல விரும்பியுள்ளார். கடந்த 2 ஜூன் 2017ஆம் ஆண்டு, இந்திய தொல்லியல் துறை உரிய நடைமுறையைப் பின்பற்றி சிலையை முழுமையாக ஆய்வு செய்தது. ஆய்வுக்குப் பிறகு நிபுணர்கள் ஆலோசனைக் குழு விண்ணப்பதாரருக்கு ஒரு கடிதம் வழங்கியது என்றும் அச்சிலை பழமையானது என யூகிக்கப்படுவதால், அதை நாட்டிற்கு வெளியே ஏற்றுமதி செய்ய முடியாது என்று பதில் அனுப்பி உள்ளனர்.

மேலும் விண்ணப்பதாரர், இந்திய தொல்லியல் துறையின் பதிவு அதிகாரியிடம் சிலையை பதிவு செய்ய வேண்டும் அல்லது உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாத பழங்காலப் பொருள் வைத்திருந்ததால், விண்ணப்பதாரர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் தொன்மையான இந்த நடராஜர் சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, தொல்லியல் துறை தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது சென்னை மணலியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடந்த சில வருடங்களாக கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் சிலைகளில் இந்த சிலை தான் மிகப்பெரியது என்றும் கூறினார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை நெய்வேலி நடராஜர் கோவிலில் உள்ளது. இது சுமார் 12 அடி (3.7 மீ) உயரம், 1.25 டன்களுக்கும் அதிகமான எடை கொண்டது. 9 அடி கொண்ட இரண்டாவது உயரமான நடராஜர் சிலை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோனேரிராஜபுரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் உள்ளது. மூன்றாவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் நிலத்தை தோண்டும்போது நான்கரை அடியுள்ள நடராஜர் சிலை மீட்கப்பட்டது. இது மூன்றாவது பெரிய நடராஜர் சிலையாக கருதப்பட்டு வந்தது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சிலை நான்கரை அடி உயரம் இருப்பதால், இதுவும் ஆசியாவில் மூன்றாவது பெரிய சிலையாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது ஆரம்ப கால சோழர் காலம் அல்லது பல்லவர் மற்றும் சோழர்களின் மாறுதல் காலம், 1, 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலை கடத்தல் தொடர்பாக இரும்பு குடோன் நடத்தி வரும் பார்த்திபன் இடம் சிலைக்கான சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் இந்த சிலைக்கு தொல்லியல் துறையில் சான்றிதழ் பெற முயன்ற வெளிநாட்டிலுள்ள பெண்ணிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சிலையின் சரியான தொன்மை தன்மையை அறிவதற்கு இந்திய தொல்லியல் துறை டெல்லி மற்றும் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மூலம் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலையை திருடும்போது முழுமையாக நேர்த்தியாக எடுக்க முடியாததால், அடிப்பாகத்தை துண்டித்து திருடியுள்ளதாகவும் புதிதாக அடிப்பாகத்தை செய்து இணைத்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இதுபோன்ற ஆதாரங்களை அடிப்படையாக வைத்து எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டது என தேடுதல் மேற்கொண்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பல நூறு கோடி மதிப்புள்ள 29 பஞ்சலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பதையும், தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிளை லண்டனிலும், தஞ்சை சரபோஜி மன்னர் மற்றும் மகன் சிவாஜி இருக்கும் அரிய ஓவியத்தை அமெரிக்காவிலும் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மும்பைக்கு கடத்த முயன்ற ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details