சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த ஆசிய காட்டு கழுதை பிரசவிக்கும் நேரத்தில் வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த சம்பவம் பூங்கா ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் பழமையான பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த வண்டலூர் உயிரியல் பூங்கா, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இதில் 178 வகையான 2300 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு பல்லாயிரக்கணக்கான பறவைகள், புலி, சிங்கம், கரடி, மான், யானை உள்ளிட்ட விலங்குகள் பார்வைக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்து விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களை பார்வையிட்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி சமீபத்தில் பூங்காவில் ரூ 4.3 கோடி செலவில் அருங்காட்சியகம் மற்றும் பூங்கா தியேட்டர் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விலங்குகளுக்கான பராமரிப்புகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆதரவாளர் ரூ.13.5 கோடி முறைகேடு... வருமான வரித்துறை விசாரணை!
இந்நிலையில் பூங்காவில் ஐந்து வயதான ஆசிய காட்டு கழுதை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அது சில மாதங்களுக்கு முன் கருவுற்று இருந்தது. இதனால் பூங்கா பராமரிப்பாளர்கள் நல்ல முறையில் கழுதையை கவனித்து வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று பூங்காவில் காட்டு கழுதை மகப்பேறு காரணமாக வயிற்றில் இருக்கும் தனது குட்டியினை பிரசவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது.
நீண்ட நேரமாகியும் குட்டியை பிரசவிக்க முடியாமல் தவித்து வந்துள்ளது தாய் கழுதை. இதனால் பூங்கா அதிகாரிகளின் ஆலோசனையின் பெயரில் உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காட்டு கழுதை வயிற்றிலிருந்து ஒரு ஆண் குட்டியை எடுத்து உள்ளனர்.
எதிர்பாராத விதமாக குட்டி வயிற்றிலேயே இறந்துள்ளது தெரியவந்தது. பின் சிறிது நேரத்தில் தாய் கழுதையும் நரம்பு அதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்தது. இதனால் உயிரியல் பூங்கா மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தாய் காட்டு கழுதையும், குட்டியும் உயிரிழந்த சம்பவம் உயிரியல் பூங்கா ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் கூடுதல் சர்வதேச விமான சேவை அதிகரிப்பு!