செய்தியாளர்களைச் சந்தித்த ஆசியம்மாள் ஐஜி சென்னை:பொருளாதார குற்றப்பிரிவில் உள்ள முக்கிய வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து பொருளாதார குற்றப்பிரிவின் ஆசியம்மாள் ஐஜி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “முதற்கட்டமாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3ஆயிரத்து 500 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒரு லட்சத்து 9 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.
இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக தனியாக பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்யப்படும். கடந்த 20ஆம் தேதி 40 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக இயக்குநர் ராஜசேகர் மற்றும் எட்டு இயக்குநர்கள் பதிவு செய்யப்படாத இயக்குநர்கள் 19 பேர், மேலாளர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 526 பேர் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளனர். 603 வகையான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். 4ஆயிரம் பக்க அளவில் முதற்கட்ட குற்றப் பத்திரிக்கை ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹிஜாவு மோசடி:கடந்த மே மாதம் 17ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் ஆதாரங்கள் அடிப்படையில் முதலீட்டாளர்கள் 89 ஆயிரத்து 433 பேர், நேரடியாக பெறப்பட்ட புகார்கள் என்ற அடிப்படையில் 13 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாகவும் தனியாக புகார் பெறுவதற்கு பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது, அவற்றில் புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்கலாம்” என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த வழக்கில் கடந்த 16ஆம் தேதி சுஜாதா காந்தா கோவிந்தராஜுலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிந்தராஜுலுவிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐஎஃப்எஸ் மோசடி விவகாரத்தில் 3ஆயிரத்து 170 முதலீட்டாளர்களிடம் புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தியதில் 700 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும் 19 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக 443 பேரிடம் சமீபத்தில் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
ஏஆர்டி ஜூவல்லர்ஸ் மோசடி:772 முதலீட்டாளர்கள் என இருந்த நிலையில், கூடுதலாக ஆயிரத்து850 பேர் வரை புகார் அளிக்கப்பட்டு 28.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்வின், ராபின் ஆகிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் மே 22 ஆம் தேதி கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக ஒன்பது இடங்களில் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், 9.60 லட்சம் ரூபாய் பணமும், 30 சவரன் தங்கம், 60 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று கார்கள் மற்றும் 24 வங்கிகள் முடக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடியே 5 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. இரண்டு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, முகப்பேரில் உள்ள ஏஆர் மாலில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் 60 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை நடைபெறுகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய ஆசியம்மாள் ஐஜி, “திருவண்ணாமலை தொடர்பான சிவிஆர்எஸ் வழக்கில் 39 கோடி ரூபாய் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில் 30 கோடி ரூபாய் அளவில் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. எஸ்எஸ் குரூப் என்ற நிறுவனத்தின் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 20 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மோசடிக்கு உள்ளானவர்கள் 2ஆயிரத்து 87 பேர், இவர்கள் இழந்த பணத்தின் மதிப்பு 77 லட்சம் ரூபாயாகும். இதில் 5 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர், ராஜ்குமார் சீனிவாசன் என்பவரை கடந்த 23ஆம் தேதி கைது செய்துள்ளோம்.
'நியமிக்ஸ் ப்ரோபெர்ட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவன மோசடி தொடர்பாக புது வழக்கு ஒன்று கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 15 புகார்களில் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதில் 17 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் துணை நிறுவனங்கள் 15 செயல்பட்டு வருவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 5.5 லட்சம் ரூபாய், 1009 கிராம் தங்க நகை, 13 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 62 அசல் பத்திர ஆவணங்கள் பிரிவுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், புகார் அளிப்பவர்கள் ஒரு சிலருக்கு பணம் கொடுத்து குற்றவாளிகள் சரி செய்கின்றனர். இதனால், அச்சமின்றி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மேலும், "ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் 132 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் வழிகாட்டுதல் மதிப்பு 32 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் 49 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதன் வழிகாட்டுதல் மதிப்பு 23 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகியாக இருந்த ஹரிஷ் பெயரில் உள்ள ஐந்து சொத்துக்கள் அவரது மனைவி பேரில் உள்ள ஒரு சொத்து அவரது சகோதரி மாலினி பெயரில் ஒரு சொத்தும், ஹரிஷ் உறவினர்கள் பெயரில் இரண்டு சொத்துகளும், ஹரிஷ் நண்பர் பெயரில் இரண்டு சொத்துக்களும் இருந்தன அவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹிஜாவு மோசடி வழக்கை பொறுத்தவரையில், மொத்தம் 139 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது, 13.81 கோடி ரூபாய் வழிகாட்டுதல் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் ஆகிய மூன்று வழக்குகளில் ஒன்பது பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு ரூசோ என்ற குற்றவாளி 12.5 கோடி ரூபாய் பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எந்த அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆர்.கே. சுரேஷ் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. முக்கியமான ஆருத்ரா, ஹிஜாவு மற்றும் ஐஎப்எஸ் வழக்குகளில் தலா 500 முகவர்கள் அடையாளம் காணப்பட்டு முதற்கட்டமாக 100 முகவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம்.
ஆருத்ரா வழக்கை பொறுத்தவரையில் 35 முகவர்கள் சம்மனுக்கு ஆஜராகி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரிக்கப்படும் முகவர்கள் எந்த அளவில் வசூல் செய்து மோசடிக்கு தொடர்பில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பொறுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏஆர்டி மோசடி விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 47 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு மோசடியை அரங்கேற்றி இருப்பதாக கைது செய்யப்பட்ட கணேஷ் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பெரும்பாலானவற்றின் முதல் தகவல் அறிக்கையை மத்திய விசாரணை பிரிவு பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது" என்றார்.
இதையும் படிங்க:ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி; ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல்!