தமிழ்நாட்டில் வழக்கம்போல் அரசு நடத்தும் முகாம்களில் ரத்ததானம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு மாநில ரத்த பரிமாற்று குழுமம் இணைந்து 90 அரசு ரத்த வங்கிகளை நிர்வகித்து வருகின்றன. இந்த 90 அரசு ரத்த வங்கிகள் மூலம் சுமார் 4 லட்சம் ரத்த அலகுகள், ஒவ்வொரு ஆண்டும் தன்னார்வ ரத்த தானம் செய்பவர்களிடமிருந்து சேகரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் சராசரியாக சுமார் 33,000 ரத்த அலகுகள் ஒவ்வொரு மாதமும் தேவைப்படுகின்றன. கோவிட்-19 தொடர்பான விதிமுறைகள் காரணமாக, சாலை விபத்து, அவசரகால சிகிச்சைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் குறைந்து இருப்பதால் ரத்த அலகுகளின் தேவை குறைந்துள்ளது.