சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று(பிப்.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில், தமிழ்நாட்டில் மட்டும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தடை செய்யப்படுவதாகவும், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டபட்டது.
அப்போது நீதிபதிகள், பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் உற்பத்தி நிலையிலேயே தடுப்பதுடன், பிற மாநிலங்களிலிருந்து வருவதையும் தடுக்க வேண்டும். தடையை அமல்படுத்துவதில் அக்கறையில்லை என்றால் தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தியை ஏன் தடுக்க வேண்டும்? பிளாஸ்டிக் பொருட்களைத் தடுப்பதா? அல்லது ஊக்குவிப்பதா? என அரசு உரிய முடிவெடுக்க அறிவுறுத்தினர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும். பெரும்பாலான கடைகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பிளாஸ்டிக் பைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் மாற்றுப் பொருட்களால் ஆன பைகளுக்கு அதன் மதிப்பைவிட கூடுதலான தொகை வசூலிக்கப்படுகிறது என நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.
நீதிபதிகள் உத்தரவு