வயது பேதமின்றி அனைவராலும் தோழர் என்றழைக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஆர்.நல்லக்கண்ணு. இன்றைக்கும் இளைஞர்களுக்கான உத்வேகமாய், அரசியல் களத்தில் ஓய்வின்றி சுழன்று கொண்டிருப்பவர்தான் நல்லக்கண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இவர், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார்.
விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன் வளர்ச்சிக்காக பங்காற்றிய நல்லகண்ணுவை பெருமைப்படுத்தும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தன்று தமிழக அரசால் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்படுகிறது. தன்னலமற்ற அரசியல்வாதியாக தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏட்டுக்கல்வியில் நல்லகண்ணு: இவர் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் நான்கு ஆண்கள், ஐந்து பெண்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்தார். பெற்றோர்கள் ராமசாமி – கருப்பாயி ஆவர். ஸ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார்.
பி.எல் படிப்பு இரண்டாண்டுகள் படித்த நிலையில், தீவிர அரசியல் ஈடுபாட்டால் அப்படிப்பு முழுமையடையவில்லை. 1936 ஆம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷ் அரசுக்கெதிராக செயல்படத் தொடங்கிய நல்லகண்ணு, 1937 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி சிறுவர்களோடு சிறுவனாக கேட்டுக்கொண்டபோது அவருக்கு வயது 12.
பின்னர் 1938 ஆம் ஆண்டு நடந்த ஹார்வி மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின்போது, பெரியவர்களுக்கு உதவியாக சென்று அரிசி வசூலில் ஈடுபட்டார். அரிசி பெட்டிகளைத் தலையில் சுமந்து சென்றார். 1939 ஆம் ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, போர் ஆதரவுப் பிரச்சார நாடகம் நடத்தப்பட்டது.
போராட்ட களம்: சுதந்திரப் போராட்ட தாகம் கொண்ட மாணவர்கள் துணையுடன் அந்நாடகத்தை எதிர்த்து முன்னணியில் நின்று குரல் கொடுத்தார். அப்போது ஒரு காவல் அலுவலர் மாணவர்களை அடித்தார். உடனே அதைக் கண்டித்து மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது காவல்துறைக்கு ஆதரவாகச் செயல்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உரிமையை நிலைநாட்டினார்.
1940 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த நிதி வசூலை இவர் எதிர்த்துக் குரல் கொடுத்தபோது, மாணவர் என்ற காரணத்தால் கைது செய்யப்படாமல் அடித்து விரட்டியடிக்கப்பட்டார். 1943-1944 காலக்கட்டத்தில் ‘கலைத் தொண்டர் கழகம்‘ என்னும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக செயல்பட்டார்.
எட்டயபுரத்தில் பாரதி நினைவு மண்டபம் கட்ட அவ்வமைப்பின் சார்பில் 400 ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். 1944 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். இதனைத்தொடர்ந்து சென்னைக்கு வந்து ‘ ஜனசக்தி அலுவலத்தில் செய்திக்குழுவில் பணியாற்றத் தொடங்கினார்.
தூணில் கட்டப்பட்ட நல்லகண்ணு: அப்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து நெல் மூட்டைகளைப் பறிமுதல் செய்தார். நகர வாழ்க்கை பிடிக்காததால் சென்னையிலிருந்து புறப்பட்டு நாங்குனேரி தாலுகாவில் விவசாய சங்க ஊழியராக செயல்பட்டார்.
அம்பாசமுத்திரம், சிவகிரி, புளியங்குடி, தென்காசி மற்றும் நாங்குனேரி ஆகிய பகுதிகளில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் ஜீயர் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்த மக்களை பல மைல்கள் தினசரி நடந்தே சென்று பேசிப்பேசி முயன்று ஒன்று திரட்டி மடங்களுக்கு எதிராகப் போராடச் செய்தார்.
மிரட்டல்களுக்குப் பணியாமல் துணிச்சலாக விளைந்த நெல்லை அவரவர் வீடுகளுக்குக் கொண்டு செல்லும் நிலையை ஏற்படச் செய்தார். மடத்துத் தரப்பில் வழக்குகள் போடப்பட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்குநேரிக்கு ஒரு மே தினத்தன்று வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி மற்றும் பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது அங்கு சில தெருக்களில் பிற சமூகத்தினருக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் ஆயிரக்கணக்கான பேர் மீறி சென்றதால் ஜீயர் மடத்து ஆட்களால் கூட்டம் முடிந்து இரவு திரும்பிய நல்லகண்ணுவை, ஒரு தூணோடு சேர்த்துக் கட்டி வைத்து அடித்துள்ளனர். 1948 ஆம் ஆண்டில் கட்சி தடை செய்யப்பட்டபோது நல்லகண்ணு தலைமறைவானார்.
காமராஜருடன் சந்திப்பு: 1949 டிசம்பரில் இவர் கைது செய்யப்பட்டபோது, கூட்டாளிகளைப் பற்றியும் அவர்களது மறைவிடங்கள் பற்றியும் கேட்டு அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் காவல்துறையினர் சித்திரவதை செய்தனர். இருப்பினும் தன் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதிப்பாட்டுடனும் இருந்தார்.
நாங்குனேரி சப் ஜெயிலில் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில், நெல்லைச் சதி வழக்கிலும் சேர்க்கப்பட்டதால் அவரது 29 வது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை கொக்கிரகுளம் சிறையில் ஏழாண்டுகள் தண்டனை அனுபவித்து 1956 ல் விடுதலையானார்.