சென்னை: இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், "தி வில்லேஜ்" உருவாகியிருக்கும் வெப் தொடர் ஓடிடி (OTT) தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்த வெப் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்சன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். இந்த தொடர் நவ.24ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரில் திவ்யா பிள்ளை, ஆலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா, முத்துக்குமார், கலைராணி, ஜான் கொக்கேன், ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்த வெப் தொடர் நவம்பர் 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. இதுமட்டுமின்றி இந்தத் தொடர் இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகவுள்ளது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் இன்று(நவ.17) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்யா, ஜான் கொக்கேன், நரேன், தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் , நடிகைகள் திவ்யா பிள்ளை, கலைராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, "ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எனக்கு இந்த வெப் சீரிஸ் ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப விஷுவல் ரெப்ரசன்டேசன் அதிகமாக இருந்தது. இதன் பட்ஜெட் என் படங்களை விட மூன்று மடங்கு அதிகம். இந்தியன் ஓடிடி தளத்தில் இப்படியான ஹாரர் கலந்த ஒரு வித்தியாசமான கதை. அதுவும் நமது தூத்துக்குடி பகுதியில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் மிலிந்த் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பாவனைகளை கொண்டு வருவதற்கு எங்களை கொன்றுவிட்டார். தினமும் 20 மணி நேரம் ஷூட் போகும். மேக்கப் போடவே ரொம்ப கடினமாக இருக்கும். எப்போது தான் படப்பிடிப்பு முடியும் என்று இருந்தது. இந்தப்படம் வெளியாவதற்கே வெற்றி விழா வைக்க வேண்டும். இந்தப்படம் நடித்தது புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த மாதிரி ஹாரர், த்ரில்லர் முயற்சி பண்ணதில்லை. இது ஒரு கான்செப்ட்(concept) தான். இப்படியான படங்களுக்கு சவுண்ட் & இசை மிக முக்கியம். இதை கையாள்வது பெரிய டாஸ்க்காக இருந்தது.