சென்னை: இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஓடிடி (OTT) தளமான அமேசான் பிரைமில் (amazon prime) வெளியாக இருக்கும் வெப் தொடர், “தி வில்லேஜ்”. இந்த வெப் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்சன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். இந்த தொடர் வருகிற 24ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என பிரீமியர் வெளியீட்டுத் தேதியை படக்குழு நேற்று அறிவித்தது.
இந்த தொடரில் திவ்யா பிள்ளை, ஆலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா, முத்துக்குமார், கலைராணி, ஜான் கோக்கன், ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்த வெப் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.
இது குறித்து இயக்குநர் கூறுகையில், “எங்கள் கடுமையான உழைப்பில் அன்பின் வெளிப்பாடான தி வில்லேஜ்-ஐ உலகளாவிய பார்வையாளர்களிடம் பிரைம் வீடியோவுடனான கூட்டாண்மையோடு கொண்டு செல்வது எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு நல்ல திகில் தொடர் அல்லது திரைப்படம் என்பது, இரவில் தனியாக வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே உங்களை அச்சுறுத்துவதாகவும், ஒரு மரக்குச்சி உடையும் சத்தம் கூட உங்கள் இதயத்துடிப்பை ஒரு கணம் நிறுத்தி, உங்களைச் சுற்றி நிழலுருவங்கள் உயிரெழுந்து வருவதுபோல தோற்றமளிக்கச் செய்ய வேண்டும்.
இந்த பிரிவு வகை திரைப்படங்களை அனுபவித்து, ரசிப்பவர்களுக்கு அடிவயிற்றைக் கலக்கும் வகையில் அச்சத்தை உருவாக்கும் உள்ளடக்கத்தை கொண்டு வர நான் விரும்புகிறேன். நாங்கள் ஒவ்வொருவரும் நடிகர்கள். குழுவினர் தி வில்லேஜ் மூலம், திகில் படங்களின் ஆர்வலர்கள் மட்டுமின்றி, அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் மேம்பட்ட திரைப்படக் கலை அம்சத்தை விரும்பி, அனைவரும் ரசிக்கக் கூடிய வகையிலான ஒரு திரைப்படத்தை வழங்க முடிந்தது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"இது எங்க நிலம்.. எங்க இடம்.. விட்டுப்போக மாட்டோம்.." - அழுத்தமான வசனங்களுடன் கருப்பர் நகரம் டீஸர்..