சென்னை: அரும்பாக்கம் தனியார் தங்க நகை கடன் வங்கியில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய நபரான முருகன் மற்றும் அவரது கூட்டாளி சூர்யா ஆகியோர் சரணடைந்த நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம் இவர்களுக்கு வாகன உதவி செய்து, தங்கத்தை விற்க உடந்தையாக இருந்த செந்தில் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் செந்தில், தங்கத்தை உருக்குவதற்கு உதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தை பொறுத்தவரையில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தோஷிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ்க்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து காவல் ஆய்வாளரின் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சூர்யா, முருகன் மற்றும் செந்தில் ஆகியோரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, வரும் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் மனைவி மெர்ஸி இந்திரா மற்றும் குற்றவாளி சந்தோஷ் மனைவி ஆகிய இருவரும் உறவினர் என்பதால் கொள்ளை சம்பவத்தில் தங்க நகைகளை மறைக்க உதவியாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.