சென்னை: அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் தங்க நகைகள் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கொள்ளை போனதாக கூறப்படும் 31.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் காவல்துறையினர் முறையாக கணக்கிட்டு பார்க்கும் பொழுது 28 கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வங்கி தரப்பில் கொள்ளை போன தங்கம் எவ்வளவு என்பதை தவறாக அதிகளவில் மதிப்பிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொள்ளை போன தங்கம் எவ்வளவு என்பது குறித்து ஆவணங்களுடன் சமர்பிக்க வங்கி நிர்வாகிகளிடம் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் எவ்வளவு தங்கத்தை கொள்ளை அடித்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்ட பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகிய இரு கொள்ளையர்களை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. குறிப்பாக கொள்ளையன் சந்தோஷ் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த பிறகு இரண்டு மணி நேரம் பொழிச்சலூர் பகுதியில் சுற்றி வந்தது செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த போது தெரியவந்தது. மேலும் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜின் மனைவி மெர்ஸியும், சந்தோஷின் மனைவி ஜெயந்தியும் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடிப்படையாக வைத்து சந்தோஷிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஒரு கட்டத்தில் சந்தோஷ் தங்கம் எங்கு மறைத்து வைத்திருக்கிறேன் என்பதை தெரிவிப்பதாகவும், ஆனால் இதில் தொடர்புடைய நபர் காவல் ஆய்வாளர் என்பதால் அவரை வழக்கில் சேர்க்கக்கூடாது என காவல்துறையிடம் சத்தியம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. கொள்ளையன் சந்தோஷிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என தனிப்படை போலீசார் சத்தியம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் தங்க நகைகளை பதுக்கி வைத்திருப்பதை கொள்ளையன் சந்தோஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.