சென்னை: சென்னையை தலைமை இடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளில் 37 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 57 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆருத்ரா நிறுவனத்தில் ஒரு லட்சத்து 9,255 பேர், ரூ.2,438 கோடி ரூபாய் முதலீடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆருத்ரா கோல்டு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் உரிமையாளர்களாக செயல்பட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஷ், பேச்சிமுத்து ராஜ் (எ) ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ். மாலதி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.