சென்னை:பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி ஆருத்ரா நிதி நிறுவனம் பல கோடி மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த மே மாதம் 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநராக பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
ஆருத்ராவின் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 11 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 70 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளன. மேலும் வழக்கு விசாரணை அதிகாரியாக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் விசாரணையை தொடங்கியுள்ளார்.