சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நாளை வெளியிடுவதற்கு கல்லூரிக்கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. அரசுக்கல்லூரிக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலைத்தாெடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.
இதுகுறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் கூறும்போது, 'தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரையில் பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டன. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.