தமிழ்நாடு

tamil nadu

செயற்கை நுண்ணறிவு தேர்வுக் கட்டுப்பாட்டு மையத்தை தொடங்கிய டிசிஎஸ்!

By

Published : Oct 18, 2019, 9:26 AM IST

சென்னை: செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தேர்வுக் கட்டுப்பாட்டு மையத்தை டிசிஎஸ் நிறுவனம் சோழிங்கநல்லூரிலுள்ள தனது அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

TCS ION started Artificial intelligence exam centre

டாடா குழுமத்தின் டிசிஎஸ் மென்பொருள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டிசிஎஸ் ஐயான் (TCS iON), நாடு முழுவதும், பல்வேறு நகரங்களிலுள்ள தனது டிஜிட்டல் மையங்களில் தேர்வு நடத்தி வருகிறது.

இந்த மையத்தின் மூலம் ஏராளமானவர்கள், பல்வேறு நகரங்களில் இருந்து, ஒரே நேரத்தில் இணையத்தில் தேர்வெழுத முடிவதோடு, அவற்றை எளிமையாகக் கண்காணிக்கவும் முடியும். கல்வி நிறுவனங்களின் தேர்வு, பெரு நிறுவனங்களில் ஆள்சேர்க்கை போன்றவற்றிற்கு இந்த மையங்களைப் பயன்படுத்தி தேர்வு நடத்த முடியும்.

டிசிஎஸ் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் இதுபோன்று ஏராளமான ஐயான் மையங்கள் உள்ள நிலையில், முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஐயான் தேர்வுக் கட்டுப்பாட்டு மையம், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் செயற்கை நுண்ணறிவு, க்ளவுட் அனாலிட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) ஆகிய நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டிசிஎஸ் ஐயான் தேர்வு மையங்களில் தேர்வு நடத்தி, அதனை எளிமையாகக் கண்காணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்வு நிலையத்தின் தயார் நிலை, அங்குள்ள தட்பவெட்ப நிலை, தேர்வு நடத்தப்படும் இயந்திரங்களின் தயார் நிலை, தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனரா உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சென்சார்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் நிகழ் நேரத்தில் கண்டறிந்து, தேர்வுக்கு இடையூறு ஏற்படாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தும் திறன்கொண்டது இந்த கட்டுப்பாட்டு மையம்.

இது தொடர்பாக பேசிய டிசிஎஸ் ஐயான் நிறுவனத்தின் சர்வதேசத் தலைவர் வெங்குசுவாமி ராமசுவாமி, இந்த மையத்தின் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகளை நேரடியாக கண்காணித்து, தவறுகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும், இந்தத் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் ஊரகப் பகுதிகளிலும் எளிமையாக தேர்வு நடத்த முடியும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:

பதற்றத்தில் எல்லை: இந்தியர்களை வெளியேற்றிய மெக்சிகோ!

ABOUT THE AUTHOR

...view details