சென்னை:சவுக்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர், நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள காலியிடம் ஒன்றில் தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரது நண்பர் சீனிவாசன் பூக்கடை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், ரவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ரவியின் தலையில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்த காரணத்தினால், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து பூக்கடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நேற்று சௌக்கார்பேட்டை ஆதியப்பன் நாயக்கன் தெரு பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், உயிரிழந்த ரவி மற்றும் அவரது நண்பர்களான தீனா (எ) காக்கா தீனா (23), திலீப் குமார் (21) மற்றும் ஒரு சிறுவர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இறுதி ஊர்வலம் முடிந்து ரவியிடம் அவரது நண்பர்கள் மூவரும் கஞ்சா போதையில் மது கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதில், ரவியை மூவரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ரவி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சவுக்கார்பேட்டையைச் சேர்ந்த தீனா (எ) காக்கா தீனா மற்றும் மணலி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தீனா மீது யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 4 வழக்கு நிலுவையில் இருக்கிறது. மேலும் தலைமறைவாக உள்ள சிறுவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கூழ் அண்டா மீது விழுந்து முதியவர் உயிரிழப்பு!