சென்னை ஐயப்பந்தாங்கல் வி.ஜி.என் காலணியில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால், சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது உறவினர் என அறிமுகமாகிய ராஜேஷ் (எ) தீனதயாளன் (34), போண்டா மணியுடன் நெருங்கி பழகி உதவிகளை செய்து வந்துள்ளார். தொடர்ந்து போண்டா மணி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னரும், ராஜேஷ் போண்டா மணியின் வீட்டிலும் சென்று உதவி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, போண்டா மணியின் மனைவி மாலதி ராஜேஷிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து மருந்து வாங்கி வருமாறு அனுப்பியுள்ளார். ஆனால் மருந்து வாங்க சென்ற ராஜேஷ் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாலதி, அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அடுத்த சிறிது நேரத்தில் மாலதியின் செல்போன் எண்ணுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கியதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாலதி, இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (எ) தீனதயாளன் (எ) பிரித்வி, போண்டா மணியின் உறவினர்போல் நடித்துள்ளார். அப்போது மருந்து வாங்க கொடுத்த ஏடிஎம் கார்டில் இருந்து 1 லட்சம் ரூபாயை எடுத்து, அதன் மூலம் நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ராஜேஷை தேடிவந்த நிலையில், திருப்பூரில் உள்ள உறவினரின் வீட்டில் பதுங்கியிருந்த ராஜேஷை இன்று (அக் 7) காலை கைது செய்தனர். மேலும் கைதான ராஜேஷ் மீது ஏற்கனவே கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நடிகர் போண்டாமணிக்கு தீவிர சிகிச்சை - கண்ணீர் மல்க உதவி கேட்கும் நடிகர் பெஞ்சமின்