சென்னை:கந்து வட்டி விவகாரத்தில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, சினிமா இயக்குநர் ஆர்.கே செல்வமணி மீது அவதூறு வழக்கை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத சினிமா இயக்குநர் ஆர்.கே செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
திரைப்பட இயக்குநரும், நடிகை ரோஜாவின் கணவருமான இயக்குநர் ஆர்.கே செல்வமணி பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை இயக்கி உள்ளார். கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை ஆகிய வெற்றிப் படங்கள் இவரின் இயக்கத்தில் வெளி வந்தவை. இந்நிலையில் கந்து வட்டி புகாரில் கடந்த 2016ஆம் ஆண்டு சினிமா பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:Matrimonial fraud: திருமண தகவல் இணைய தளங்களில் தொடரும் பண மோசடி- மத்திய மாநில அரசுகள் ஒழுங்கு விதிகளை அமல்படுத்த வற்புறுத்திய நீதிமன்றம்!
அப்போது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற முறையில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தனர். இது தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்த் சந்த் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதன் பிறகு சினிமா பைனான்ஸ்சியர் முகுந்த் சந்த் போத்ரா இறந்து விட்டார். அவரது மரணத்திற்கு பிறகு அவரது மகனான ககன் போத்ரா வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த வழக்கு ஜார்ஜ் டவுன் 15வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சுமத்தப்பட்டதாக கூறப்படும் இயக்குநர் ஆர்.கே செல்வமணியும் ஆஜராகவில்லை, அவர் சார்பில் அவரது வக்கீலும் ஆஜராகவில்லை. இதை அடுத்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி, இயக்குநர் ஆர்.கே செல்வமணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து, விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு இன்றுடன் முடியுமா? சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!