தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வெறுப்புணர்வை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க"-வானதி சீனிவாசன்

வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன் அறிக்கை
வானதி சீனிவாசன் அறிக்கை

By

Published : Mar 4, 2023, 5:52 PM IST

சென்னை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் காரணமாக, தமிழகத்தில் பணியாற்றி வரும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவது பெரும் கவலை அளிக்கிறது. இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும், இந்தியாவில் எங்கும் பணியாற்றும், வாழும் சுதந்திரத்தை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

கொச்சினில் இருந்து 400 கிலோமீட்டர் கடல் தாண்டி உள்ள லட்சத்தீவில் கூட தமிழர்களை சந்தித்தேன். தலைநகர் டெல்லி, சண்டிகர், மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் தமிழர்களுக்கு பெரும் பங்களிப்பு இருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் வசிக்கவில்லை. வேலை செய்யவில்லை. அனைத்து மாநிலங்களிலும், பல மாநிலங்களையும் சேர்ந்தவர்களும் பணியாற்றுகிறார்கள்.

'வசுதைவ குடும்பகம்' அதாவது உலகமே ஒரு குடும்பம், 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற உயர்ந்த நாகரிகத்தை, கலாசாரத்தை பின்பற்றுவர்கள் நாம். தமிழக மக்கள் எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை. அனைவரையுமே சகோதரர்களாக பார்த்து தான் தமிழர்கள் பழகி வருகிறார்கள். ஆனால், ஒரு சில அமைப்புகள், அரசியல் ஆதாயத்திற்காக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில், வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைத்து வருகிறார்கள். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறோம்.

வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரும் தாங்களாகவே தமிழகத்துக்கு வருவதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த கடைகளின் உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள், தங்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை என்பதற்காக ஏஜெண்டுகள் மூலம் பீகார், மேற்குவங்கம், அசாம், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள்.

வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வெளியேறுவதால், தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் (சைமா) வேதனை தெரிவித்துள்ளனர். மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தான் தேசிய அரசியலில் இருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தியா என்பது ஒரே தேசம். இந்த தேசம் அனைவருக்கும் சொந்தம் என்பது தான் தேசிய அரசியல்.

எனவே, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள், தனி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களில் அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details