சென்னை:உயர்நீதிமன்ற நீதிபதியின் தனி செயலாளர் என்று கூறி கல்லூரியில் மகனுக்கு சீட் கேட்டு மோசடி செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வி தொடர்பான வழக்குகளை விசாரித்து வருபவர் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். இவரது தனி பாதுகாவலராக இருப்பவர் ராஜ். இவர், உயர்நீதிமன்ற காவல்துறையினரிடம் கொடுத்த தகவலின் அடிப்படையில், நீதிபதியின் உதவியாளர் புஷ்பலதா உயர்நீதிமன்ற காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வி சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதியான ஆனந்த் வெங்கடேசனின் தனி செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசுவதாக கூறியதாகவும், நீதிபதியின் மகனுக்கு கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சீட்டு வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
பின்னர் கல்லூரி நிர்வாகம் வழக்கறிஞர் ஒருவர் மூலம் இது குறித்து தங்களிடம் விசாரணை நடத்தியது. விசாரணையில், நீதிபதியின் தனி செயலாளர் என போலியாக ஒருவர் பேசி கல்லூரியில் சீட்டு கேட்டிருப்பது தெரியவந்தது. எனவே, நீதிபதியின் தனி செயலாளர் என போலியாக கூறி மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!
புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் ராமாபுரத்தை சேர்ந்த வெங்கடேச பெருமாள்(53) நீதிபதியின் தனிசெயலாளர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், உயர் நீதிமன்ற நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதித்துறை அல்லாத கவுன்சிலில் உறுப்பினராக இருந்து வருவது தெரியவந்தது.
மேலும், மகன் கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டதால் நீதிபதியின் மகன் என்று கூறி கல்லூரியில் சீட் வாங்க முயற்சி செய்ததாகவும், நீதிபதி பெயரோடு ஒற்றுமையில் இருப்பதாலும், கல்வி தொடர்பான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதாலும் அவரது பெயரை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிபதியின் மகன் என தெரிவித்து தனிச் செயலாளர் எனக் கூறி பேசினால் சீட்டு உடனடியாக கிடைக்கும் என்ற அடிப்படையில் மோசடி செய்ததாகவும், நீதிபதி பெயரில் உள்ள வெங்கடேஷ் மற்றும் மோசடி செய்த நபர் பெயரும் வெங்கடேச பெருமாள் என்பதால், வெங்கடேஷ் மகன் என்று கூறிக்கொண்டு நாடகம் ஆடி மகனுக்கு சீட்டு வாங்கி கொடுத்து விடலாம் என்ற அடிப்படையில் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயரை வைத்துக் கொண்டு வேறு ஏதேனும் மோசடி ஈடுபட்டுள்ளாரா? இது போன்று எத்தனை பேரிடம் இவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:"நீட்டுக்கு அப்போ ஆதரவு.. இப்போ உண்ணாவிரதம்.. திமுக போடும் நாடகம்.." எடப்பாடி பழனிசாமி!