சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பொது ஊரடங்கின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இறுதிப்பருவத் தேர்வுகளைத் தவிர, பிற பருவப் பாடங்களில் தேர்வுக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் வழிகாட்டுதலின்படி, அரியர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதனடிப்படையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த அரியர் தேர்வு எழுத பணம் செலுத்திய மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி அண்ணாப் பல்கலைக் கழகம் தவிர உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பிற பல்கலைக்கழகங்கள் தேர்ச்சி வழங்கின.
இந்நிலையில், அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பினை வழங்காமல் உள்ளது. இதனால், பல பல்கலைக் கழகங்கள் அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வினை நடத்தி வருகிறது. ஆனால், இளங்களைப் படிப்பில் இறுதியாண்டில் படித்த மாணவர்கள் ஏற்கனவே உள்ள ஆண்டுகளில் அரியர் வைத்திருந்த பாடங்களில் தேர்ச்சி வழங்கி அறிவிக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்றத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்காமல் இருப்பதால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பட்டங்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், அரியர் பாடத்துடன் இளங்கலைப் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று முதுகலைப் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பருவத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.