சென்னை: சிலைக் கடத்தல், சிலைகளைப் பதுக்கி வைத்திருத்தல், சட்டவிரோதமாகப் பழங்கால சிலைகளை விற்பனை செய்தல் பற்றிய தகவல்கள் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டாத வகையில், தகவல் அளிக்கும் விதமாக 'பிளாக் செயின்' தொழில்நுட்பம் மூலம் புகார் அளிக்க http://complaints.tnidols.com என்ற இணையதளம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த இணையதள முகவரியைப் பயன்படுத்தி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றுபவர்களும் தங்கள் அடையாளங்களை வெளிக்காட்டாமல் பணியில் உள்ள குறைகளை எடுத்துக்கூறலாம். முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் காவல் துறையில் பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகார்கள் மற்றும் குறைகளைப் பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதே பிளாக் செயின் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள தரவுகளை ரகசியமாக சேமிக்கவும், கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.