சென்னை:ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம் காணப்படுவதால், அந்த நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து வருபவர்களும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் 3 இடங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள தகவலில், ''ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே, மஞ்சள் காய்ச்சல் நோய்ப் பரவலைத் தடுக்க இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பத்து நாட்களுக்குப் பிறகே ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவோ அல்லது அந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரவோ அனுமதிக்கப்படுவர். இது விமான நிலையங்களில் சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 3 இடங்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு - மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி
ஆப்ரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம் காணப்படுவதால், அங்கிருந்து வருபவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி இந்தியாவில் மொத்தம் 50 இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்தடுப்பு ஆராய்ச்சி நிலையம் கிண்டியில் செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையில் தடுப்பூசி செலுத்தப்படும்.
சென்னை ராஜாஜி துறைமுக சுகாதார நிறுவனத்தில் திங்கள், புதன்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், தூத்துக்குடி புதியத்துறைமுகம் துறைமுக சுகாதார அமைப்பில் செவ்வாய்க் கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் செலுத்தப்படும். இதற்கு முன்கூட்டியே இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் குடியுரிமைப் பெற்ற ஆப்பிரிக்கா, அமெரிக்கா நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டு , அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டு பயணம் செய்ய வேண்டும். மேலும் இந்த 3 இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் தமிழ்நாட்டில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை’’ என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் ஆழ்கடல் ஒலி சென்சாருக்கான பொருட்கள்; குறைந்த செலவில் உருவாக்க முயற்சி