சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகைகள், விழாக்கள், அரசியல், சாதி மற்றும் மதத்தலைவர்களின் பிறந்தநாள் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் அரசியல், சாதி மற்றும் மதத்தலைவர்கள் பங்கேற்கும்போது இரு தரப்பினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறான அவசரகால பணிகளுக்காக ஆயுதப்படையினர் மற்றும் காவலர்களை தயார் நிலையில் வைக்க பல்வேறு அறிவுறுத்தல்களுடன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “ஆயுதப்படையினர் மற்றும் இளம் காவலர்களுக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்து பயிற்சி அளிக்க வேண்டும். அதனை ஆயுதப்படையில் உள்ள உயர் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். ஆயுதப்படையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலவரச் சம்பவங்களின்போது படையை வழிநடத்த அவ்வப்போது பயிற்சி வழங்க வேண்டும்.