தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2023: இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி அபார வெற்றி! - இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ்

Chennai Grand Masters Chess 2023: சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2023 போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி அபார வெற்றி பெற்று உள்ளார். மேலும், இந்த போட்டியில் தொடர்ந்து முதலிடத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் உள்ளார்.

Chennai Grand Masters Chess 2023
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2023: அர்ஜுன் எரிகைசி அபார வெற்றி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 11:02 PM IST

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2023 போட்டியின் 6வது சுற்றில், கிராண்ட் மாஸ்டர்களான, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ இடைய நடைபெற்ற போட்டியில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் 40வது நகர்வில், பர்ஹாம் மக்சூட்லூவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்" சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், 6வது நாளான இன்று(டிச.20) நடைபெற்ற 6வது சுற்று ஆட்டங்களில் டி.குகேஷ் - பாவெல் எல்ஜனோவ், லெவோன் அரோனியன் - அலெக்சாண்டர் ப்ரெட்கே, அர்ஜுன் எரிகைசி - பர்ஹாம் மக்சூட்லூ, ஹரிகிருஷ்ணா - சனான் சுகிரோவ் ஆகியோர் விளையாடினர்.

இதில், அர்ஜுன் எரிகைசி - பர்ஹாம் மக்சூட்லூ மோதிய ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் 40வது நகர்வில் அர்ஜுன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற டி.குகேஷ் - பாவெல் எல்ஜனோவ் மோதிய ஆட்டத்தில் 30வது நகர்வில் டிராவில் முடிந்தது. மேலும், ஹரிகிருஷ்ணா - சனான் சுகிரோவ் மோதிய ஆட்டத்தில் 42வது நகர்விலும், லெவோன் அரோனியன் - அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதிய ஆட்டத்தில் 32வது நகர்விலும் டிராவில் முடிந்தன.

இந்த 6வது சுற்று முடிவில், இந்தியாவின் டி.குகேஷ் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹரிகிருஷ்ணா, பாவெல் எல்ஜனோவ், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 2,3,4 ஆகிய இடங்களில் உள்ளனர். அமெரிக்காவின் லெவோன் அரோனியன் 3 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, ஹங்கேரியின் சனான் சுகிரோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 6 மற்றும் 7வது இடங்களிலும், அலெக்சாண்டர் ப்ரெட்கே 1.5 புள்ளிகளைப் பெற்று 8வது இடத்திலும் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நாளை(டிச.21) இறுதி போட்டியானது நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்துகொள்ள உள்ள வீரர்களின் சராசரி எலோ ரேட்டிங் 2,711 ஆக உள்ளது. இந்த போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி(2727), டி.குகேஷ்(2720), ஹரிகிருஷ்ணா(2696) ஆகியோருடன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்களான, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ(2742), அமெரிக்காவின் லெவோன் அரோனியன்(2723), ஹங்கேரியின் சனான் சுகிரோவ்(2703), உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ்(2691), செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே(2689) ஆகியோரும் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

மேலும், இந்த தொடரானது டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோருக்கு கேண்டிடேட்ஸ்(Candidates) போட்டிக்கு தகுதி பெற வாய்பாக அமையும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆகியோருக்கு அர்ஜுனா விருது!

ABOUT THE AUTHOR

...view details