சென்னை:திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனரின் முழு அதிகாரத்தையும் பள்ளிக்கல்வி ஆணையர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டதற்கு கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவிக்கு நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி முறைமை குறித்தும், பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவமும், நடைமுறைச் சிக்கல்கள் சார்ந்த தீர்வுகள் எடுக்கும் திறனும் இருக்காது என்றும், தமிழக அரசின் இந்த முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: TN School Teachers: தொடக்கக் கல்வித்துறையில் 3612 ஆசிரியர்கள் பணியிட மாறுதல்!
இதனிடையே அண்மையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அதன் பிறகு புதிய ஆணையர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக் கல்வித்துறைக்கு இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் வாய்ந்தவரும், தொடக்கக்கல்வி இயக்குனராக இருந்தவருமான அறிவொளி பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.