மஹிசாசுரமர்த்தினி நரகாசுரனைக் கொன்ற வெற்றியைக் குறிக்கும் விதமாக இந்து மக்களால் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எந்தப் புதிய பணியைத் தொடங்கினாலும் அது சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. காரணம் புராணக் கதைகளில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது இடையில் வரலாற்றை திரிக்க முயற்சியா என்பது மிக நீண்ட விவாதத்துக்குள்ளானது.
இப்படி குழப்பத்தில் உள்ள தமிழர்கள் சற்று அறிவார்ந்து சிந்தித்தால் இதுபோன்ற சடங்குகள் மீதான நம்பிக்கைகளுக்கு ஓரளவு தீர்வு காணலாம் என்ற நோக்கில் தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சர் அண்ணா 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது ‘திராவிட நாடு’ இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரை இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதற்கு காரணம், அவர் எழுத்தின் வீரியம். மக்களை சிந்திக்க வைத்தால் போதும், அவர்களிடம் திணிக்க வேண்டிய அவசியமில்லை என்ற அவரது புரிதல். அந்தப் புரிதலை தனக்கே உரிய பாணியில் அறிவுரையாக வழங்கிய அவரது தமிழ். இப்படி காலத்தால் அழியாத பல்வேறு கட்டுரைகளை எழுதியிருந்தாலும், அவரின் ஆயுத பூஜை கட்டுரையின் சாராம்சத்தை அறிந்துகொள்ள வேண்டியது தமிழர்களுக்கு அவசியமாகிறது.
ஆயுத பூஜை குறித்த அண்ணாவின் கட்டுரை...
"எலெக்ட்ரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, நச்சுப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜெக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆபரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலையுச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின் இன்னும் எண்ணற்ற, புதிய பயன் தரும் மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை கொண்டாடாதவர்கள்.
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர் இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர்; நவராத்திரி கொண்டாடினவர்களல்லர். சரஸ்வதி பூசை இல்லை!
ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும் மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடிகூட, சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்ததுதான்.
நீ, கொண்டாடுகிறாய் - சரஸ்வதி பூசை, ஆயுத பூசை! ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?
மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சுயந்திரத்தின் உதவிகொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அக மகிழ்கிறாயே!
அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே! ஒரு கணமாவது யோசித்தாயா...
இவ்வளவு பூசைகள் செய்துவந்த நாம், நமது மக்கள், இதுவரை என்ன புதிய அதிசயப் பொருளை, பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா!