சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக இடையே வாக்குவாதம்: டென்ஷன் ஆன மேயர் பிரியா! சென்னைமாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (ஜூலை 28) ஜூலை மாதத்திற்கான பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. காலையில் 10 மணிக்குத் தொடங்கிய மாமன்றக் கூட்டம் மதியம் மூன்று மணி நேரம் வரை நடைபெற்றது. முதலில் தமிழ்நாடு அரசு அறிவித்த அராசணைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்பு நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் (Zero Hours) பேசிய 99ஆவது வார்டு திமுக உறுப்பினர் பரிதி இளம்சுருதி "தனது வார்டில் தற்போது சாலை வசதி நன்றாக இருக்கிறது. கடந்த 10ஆண்டுகாலமாக சாலை சரியில்லை. திமுக ஆட்சி வந்த பிறகே சாலை நன்றாக இருக்கிறது.
இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக சென்னை இருக்கிறது''என்றார். இவருக்கு முன் பேசிய 84ஆவது வார்டு கவுன்சிலர் ஜே.ஜான் அவரது பகுதியில் பம்பிங் ஸ்டேஷன், சாலை மற்றும் பள்ளிகள் சரி இல்லை என்றும் அதுவும் 10 ஆண்டு காலமாக இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனை சுட்டி காண்பித்து, இதற்கு முன் அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை என்று 99ஆவது வார்டு உறுப்பினர் தெரிவித்தார். இதனால், மாமன்றக் கூட்டத்தில் இதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, மேயர், துணை மேயர் குறுக்கிட்டு உறுப்பினர்களை அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அப்போதும் கூட்டத்தில் அமைதி இல்லாமல் திமுக - அதிமுக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். மேயர் குறுக்கிட்டுப் பேசியும் அமளி தொடர்ந்ததால் கோபமடைந்த மேயர் பிரியா, ''அனைவருக்கும் அவையில் பேச சமமாக நேரம் ஒதுக்கப்படுகிறது. நான் பேசும்போது அவையில் யாரும் குறுக்கீடு செய்யக் கூடாது’’ என்று கோபத்துடன் எச்சரித்தார். பின்பு சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு எழுப்பிய கேள்விக்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இதையும் படிங்க:புதுக்கோட்டையில் 6வது புத்தகத் திருவிழா கோலாகலமாகத் தொடக்கம்!