இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. நிரந்தரப் பணிகளையும், சமூக நீதியையும் ஒழிப்பதற்கு வழிவகுக்கக் கூடிய தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.
அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை செயல்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ. ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை 18.10.2022ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக டெல்லியைச் சேர்ந்த பொதுக்கொள்கை மையம் (Centre for Policy Research) நியமிக்கப்பட்டிருக்கிறது. மனிதவள சீர்திருத்தக் குழுவுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணி வரம்புகள் தான் அச்சமளிப்பவையாகவும், கவலையளிப்பவையாகவும் உள்ளன.
அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கதும், அவசியமானதும் ஆகும். அதே நேரத்தில் ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்தல், தனியார் முகமைகள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையில் பணியாளர்களை பெறுதல், சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல், முதலில் தற்காலிக பணியாளர்களாக நியமித்து பின்னர் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நிலைப்பு வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது பற்றி பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது மனிதவள சீர்திருத்தக் குழுவுக்கு தமிழக அரசு அளித்திருக்கும் பணிகள் ஆகும்.
இதற்கான பரிந்துரைகளை அடுத்த 6 மாதங்களில் மனிதவள சீர்திருத்தக்குழு அரசிடம் வழங்கி, அவை நடைமுறைபடுத்தப்பட்டால், அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு தானாகவே அழிந்துவிடும். தமிழக அரசு விதிகளின்படி நிரந்தர பணிகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது; தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை.